திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் முதலாமாண்டு படிக்கும் 16,002 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.74 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணிகளை, வி.கூத்தம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமை தாங்கினார். யூனியன் சேர்மன் மகேஸ்வரி முருகேசன் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 109 கல்லூரிகளில் 5,615 பயனாளிகள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை விகிதத்தினை அதிகரிக்கும் பொருட்டு, ‘தமிழ்ப்புதல்வன்’ எனும் திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மொத்தம் 5,112 மாணவர்கள் பயனடைகின்றனர். ஆத்தூரில் உள்ள கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் மேல்நிலைக்கல்வி முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், 2024-2025 ஆம் கல்வியாண்டில், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் உள்ள 88 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 4975 மாணவர்கள், 5970 மாணவிகள் என மொத்தம் 10945 மாணவ, மாணவிகள் மற்றும் பழனி கல்வி மாவட்டத்தில் உள்ள 52 பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 2200 மாணவர்கள், 2857 மாணவிகள், என மொத்தம் 5057 மாணவ, மாணவிகள் என ஆக மொத்தம் மாவட்டத்தில் 140 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 7,175 மாணவர்கள் மற்றும் 8,827 மாணவிகள் என மொத்தம் 16,002 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.
7,175 மாணவர்களுக்கு தலா ரூ.4,900 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.4.32 கோடி மதிப்பீட்டிலும், 8,827 மாணவிகளுக்கு தலா ரூ.4,760 மதிப்பீட்டில் மொத்தம் ரூ.3.42 கோடி மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 16,002 மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.7.74 கோடி மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இன்றையதினம் வி.கூத்தம் பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பில் பயின்று வரும் 13 மாணவர்கள் மற்றும் 21 மாணவிகள் என 34 மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்வழிக் கல்வியாக இருந்தாலும் சரி, ஆங்கில வழிக்கல்வியாக இருந்தாலும் சரி, பாடங்களை நன்றாகப் புரிந்து, அறிந்து வாழ்க்கை முழுவதும் திருப்பி சொல்கின்ற அளவிற்கு மனதில் நிறுத்தும் அளவிற்குப் படித்துவிட்டால் போதும். பின் தங்கி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்ற ஏராளமானோர் நன்கு படித்து உயர் பதவிகளை வகித்து வருகின்றனர்.
பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, மாணவ, மாணவிகள் நன்கு கவனித்தாலே போதும். 80 சதவீதம் பாடங்கள் மனதில் பதிந்துவிடும். மீதி 20 சதவீதம் பாடங்களை வீட்டில் படித்தாலே போதும். மாணவ, மாணவிகள், தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் கல்வி பயின்று வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது நிரந்தரம் இல்லை. மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு இடம் பிடிப்பதுதான் நிரந்தரம். அந்த வகையில், மக்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள்” என்று கூறினார்.