திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் நவாப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டம் மூலம் பணிகள் வழங்குவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் பள்ளி மாணவிகள் தங்கள் பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வக வசதி கட்டிடம் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
ஒரே மாதத்தில் ரூ. 2 கோடியே 40 லட்சம் மதிப்பில் நவாப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஏற்பாட்டின் படி புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் ஆய்வகம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆயத்தப்பணி நடைபெற்று வருகிறது. இச்செய்தி பள்ளி மாணவிகள் பெற்றோர்கள், ஆசிரியைகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நவாப்பட்டி வார்டு உறுப்பினரும், கன்னிவாடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவருமான கீதாமுருகானந்தம் கூறும்போது... அமைச்சர் ஐ.பி.யிடம் கோரிக்கை மனுதான் கொடுத்தோம். உடனடியாக கன்னிவாடி பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளின் நலன் கருதி ரூ.2 கோடியே 40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய கழிவறைகள் கட்டிக்கொடுக்க உத்தரவிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் மகிழ்ச்சியளிக்கும் விதமாக எங்களுக்கு புதிய வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். அவருக்கு எங்கள் பகுதி மக்கள் என்றும் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறினார். வேண்டுகோளை ஏற்று புதிய வகுப்பறைகளை கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுத்துவரும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பெற்றோர்கள், பள்ளி ஆசிரியைகள் பள்ளி மாணவிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.