Skip to main content

“கனவுடா நீ படிச்சுட்டு இருக்கிறது..” - மாணவனின் நண்பர் உருக்கம்

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

A student's friend who committed suicide in NEET exam is saddened

 

சென்னை குரோம்பேட்டையை அடுத்த குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர். இவரது மகன் ஜெகதீஸ்வரன் (19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த இவர், 'ஏ' கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அதன் பிறகு மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வுக்கு முறையாகப் பயிற்சி எடுத்து வந்தார். தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்ட நிலையில், முதல் தேர்வைச் சந்தித்தார். முதல் முறை தேர்ச்சி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பயிற்சி பெற்று இரண்டாவது முறையும் நீட் தேர்வு எழுதி இருக்கிறார். அதிலும் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார். நீட் தேர்வில் தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்திருந்தனர்.

 

மேலும் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வசேகர், விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரைப் பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில், மாணவன் ஜெகதீஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் இறந்த சோகத்தில், அவரின் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இது குறித்து  ஜெகதீஸ்வரனின் நண்பர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “என் பெயர் ஃபயாஸ்தின். நான் ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படிக்கிறேன். பணம் கட்டி தான் படிக்கிறேன். என்னால் நீட் தேர்வில் 160 மதிப்பெண் தான் எடுக்க முடிந்தது. என்னுடைய தந்தை பொருளாதார அடிப்படையில் நன்றாக இருந்ததால் ஒரு தனியார் கல்லூரியில் 25 லட்சம் ரூபாய் கட்டி என்னை சேர்த்துவிட்டார். பணம் இருக்கிறவன் தான் மருத்துவராக முடியுமா?. பணம் இருக்கிறவன் மருத்துவராக ஆனால் அவன் அந்த பணத்தை மீண்டும் எடுக்கத் தான் முயற்சி பண்ணுவானே தவிர மக்கள் பணி செய்வதில் ஆர்வமாக இருக்கமாட்டான். நீட் தான் உண்மையான மருத்துவரை உருவாக்குவதற்கான தேர்வு என்றால், இத்தனை நாள் நாம் பார்த்த மருத்துவர் எல்லாம் போலியான மருத்துவரா?. இத்தனை நாள் நீட் தேர்வு இருந்ததா?. அவனது குடும்ப சூழ்நிலை, அவனால் ரூ. 25 லட்சம் கட்ட முடியவில்லை.

 

ஜெகதீஸ்வரன் மிகவும் நன்றாக படிக்கக்கூடிய நபர். இரண்டு முறை எழுதிய நீட் தேர்விலும் அவன் என்னைவிட நல்ல மதிப்பெண்களை எடுத்திருந்தான். இந்த முறை எழுதிய தேர்வில் அவன் 400 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். அவனால் மருத்துவராக முடியவில்லை என்றால் இங்கு பொருளாதார அடிப்படையில் தான் எல்லாமே இருக்கிறது. இந்த தேர்வு வைத்து என்ன தான் சாதிக்க போகிறார்கள்.  மத்திய அரசு மூலம் வந்திருக்கும் இந்த ஆளுநர் இன்னும் எத்தனை மாணவர்களை கொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை.

 

இத்தனை நாள் எங்கெங்கோ செய்தியில் பார்க்கும்போது எங்களுக்கு அதெல்லாம் அதிர்ச்சியாக இல்லை. இன்னைக்கு எங்களோட கூட இருந்த ஜெகதீஷ் இல்லை என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மருத்துவராகி அவர் மக்கள் பணி செய்ய வேண்டும் எனும் காரணத்திற்காகவே நீட் தேர்வுக்காக படித்து வந்தார். ஆனால், இரு முறையும் முடியாமல் போனது. இறுதியாக மூன்றாவது முறை பயிற்சிக்கு சேர்ந்தபோது, ‘அப்பாவுக்காகவாவது நான் மருத்துவராக வேண்டும்’ என்று சொன்னார். ஜெகதீஷுக்கு மேல் நாடுகளின் கல்லூரியில் இருந்தெல்லாம் படிப்பதற்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அவருக்கு அப்பாவுடன் இருந்து தமிழ்நாட்டில் படிக்க வேண்டும் என ஆசையோடு இருந்தார்.

 

ஒரு 15 நாள் முன்பு எனக்கு ஃபோன் செய்தபோது, ‘உனக்கு கிடைத்திருக்க வாய்ப்பு இங்கு எல்லாருக்கும் கிடைக்காது; கனவுடா நீ படிச்சுட்டு இருக்கிறது. நீ,  நல்லா படித்து மக்கள் பணியில் இரு’ என்று என்னிடம் சொன்னார். அந்த மனநிலையில் உள்ள மாணவன் அவன். இந்த நீட்டை வைத்து என்ன தான் சாதிக்க போகிறீர்கள் என்று புரியவில்லை. நானே சொல்கிறேன் இந்த நீட் தேர்வில் நான் தகுதியானவனே இல்லை. இந்த எம்.பி.பி.எஸ். எனக்கு தேவையே இல்லை. எனக்கு ஜெகதீஷ் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாக பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்கிற கதையைப் போல், மருத்துவப் படிப்புக்கு காசு போட்டதால் காசு பாக்கிறானா; இல்ல காசு பாக்கணும்னு காசு போட்றாங்களா என்பதே புரியவில்லை. 

 

சி.பி.எஸ்.சி. பள்ளியில் படித்த எங்களுக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதென்றால் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இதை எப்படி கையாளுகிறார்கள் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இந்த ஆண்டு 720 மதிப்பெண் எடுத்து நீட் தேர்வில் முதலிடத்தில் வந்த மாணவர் அரசுப் பள்ளியில் படித்து வரவில்லை. அவரும் தேர்ந்த சி.பி.எஸ்.சி. பள்ளியில் படித்து 11, 12ம் வகுப்பு என தலா ஒவ்வொரு வகுப்பிலும் ரூ. 15 லட்சம் கட்டி படித்துள்ளார். இதை விட அவலக் கேடு ஒன்னுமே இல்லை.  என்.எம்.சி யோ அல்லது மோடி அரசோ நீட் தேர்வு அவசியம் என்று சொல்கிறார்கள்.

 

ஒருவர் பணம் கட்டி மருத்துவராக ஆகிட்டார் என வைத்துக் கொள்வோம். பிரதமர் மோடிக்கோ அல்லது வேறு ஒரு உயர் பொறுப்பில் இருக்கும் நபருக்கோ உடம்பு சரியில்லாமல் போனால் பணம் கட்டி மருத்துவரான தகுதியில்லாத ஒரு மருத்துவர் வந்து உங்களுக்கு மருத்துவம் பார்த்து, உங்கள் உயிருக்கு ஏதாவது என்றால் தான் உங்களுக்கு தெரியும். உங்க உயிருக்கு ஏதேனும் ஆகும்போது தான் இந்த நீட் தேர்வு எதற்கு கொண்டு வந்தோமென்று. ஒரு வருடத்திற்கு 25 லட்சம் ரூபாய் என்றால் 5 வருடத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய். இவ்வளவு பணத்தை கட்டினால் அவனுக்கு மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்ற நினைப்பே வராதே. போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்று தான் இருக்கும். எதிர்கால ஆரோக்கியத்தை கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்