ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உருவான எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களிடம் நாளை சட்டப்பேரவை சபாநாயகர் விசாரணை நடத்த இருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு அ.தி.மு.க பிரிந்தபோது, சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மொத்தம் 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய தி.மு.கவின் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, சபாநாயகரே உரிய முடிவு எடுப்பார் என நீதிமன்றம் தெரிவித்தது. அதேபோல் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 11 எம்.எல்.ஏக்கள் விளக்கமளிக்க சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியிருந்தார். மேலும் கரோனா பாதிப்பு இருக்கும் சூழலில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் 11 எம்.எல்.ஏக்களிடமும் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நாளை காணொளி வாயிலாக விசாரணை நடத்த இருக்கிறார்.
இந்த விசாரணையில் அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து 11 எம்.எல்.ஏக்களும் பதிலளிப்பார்கள் என்றும், அதன்பிறகு சபாநாயகர் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.