கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தோகைமலை ஒன்றியம் நாகனூர் பஞ்சாயத்து மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் தோகைமலையில் ஸ்டுடியோ கடை வைத்துள்ளார். இவருக்கு மணிகண்டன், குழந்தைவேலு என இரண்டு மகன்கள். இதில் இளைய மகன் குழந்தைவேல் வயது 16. இவர் தோகைமலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இவர்களது ஊரில் நேற்று மதுரை வீரன் கோவில் திருவிழா 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து புனித நீர் எடுத்துச் செல்வதற்காக மேட்டுப்பட்டியில் இருந்து 50க்கும் மேற்பட்டவர்கள், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்தபோது குழந்தைவேலு மட்டும் சற்று ஆழமான பகுதிக்குச் சென்று குளித்துள்ளார். அப்போது குழந்தைவேலு புதை மணலில் சிக்கித் தனது சகோதரன் மணிகண்டன் கண்ணெதிரிலேயே தண்ணீரில் மூழ்கினார். சம்பவம் குறித்து முசிறி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து காவிரி ஆற்றில் தேடத் துவங்கினர். நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை பரிசல்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் 10க்கும் மேற்பட்டவர்கள் தேடினர். நீரில் மூழ்கிய குழந்தைவேலு உடல் கிடைக்கவில்லை.
2வது நாளாக நேற்று தீயணைப்புத் துறையினர் எந்திர படகு மூலம் 17 பேர் கொண்ட குழுவினர் தேடி வந்தனர். இந்நிலையில் நீரில் மூழ்கிய பிளஸ் டூ மாணவன் குழந்தைவேலுவின் உடல், சம்பவ இடத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாந்திவனம் அருகே காவிரி கரை ஓரத்தில் இருந்ததை உள்ளூர் மீனவர்கள் கண்டுபிடித்தனர். மீட்கப்பட்ட மாணவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.