"மத வேற்றுமையின்றி ஒற்றுமையாக இருக்கும் எங்களிடம் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேசச் சொல்லி, சிலர் ஊருக்குள் வந்து நிர்பந்தம் செய்கிறார்கள்" என மைக்கேல் பட்டி கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், வடுகம்பாளையத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி, தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ள மைக்கேல் பட்டியில் உள்ள கிருஸ்தவ பள்ளியில் பிளஸ் டூ படித்துவந்தார். அவர் சில நாட்கள் முன்பு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அவரின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அந்த மாணவி பேசுவதுபோன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு, மதமாற்றம் தான் மாணவியின் இறப்பிற்கு காரணம் என தமிழ்நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் பாஜக, இந்து முன்னனி அமைப்புகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் உச்சமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய செயலாளர் எச். ராஜா உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்று மதமாற்ற தடை சட்டம் என்கிற கோரிக்கையையும், சிபிஐ விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
மறுபுறம் பள்ளி அமைந்துள்ள பகுதிவாழ் மக்களும், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கூடி, பாஜக பொய் பிரச்சாரம் செய்கிறது என கூறி தஞ்சையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதற்கிடையில் பாஜக தலைமை, விசாரணை நடத்த குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாணவி படித்த பள்ளிக்கூடம் உள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில், "எங்கள் கிராமத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. இதுவரை இப்பகுதியில் மதமாற்றம் என்கிற பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், இதை சிலபேர் தவறாக பரப்பி வருகின்றனர். எங்களை ஒரு தரப்பினருக்கு ஆதரவாக பேசச் சொல்லி சிலர் நிர்பந்தம் செய்கின்றனர். இப்பிரச்சனை தொடர்பாக யாரும் எங்கள் பகுதிக்கு வரக்கூடாது. அவர்கள் வந்தால் எங்கள் ஒற்றுமைக்கு குந்தகம் வரும். அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.