2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இவர் தாக்கல் செய்யும் 10 ஆவது பட்ஜெட் இதுவாகும். மேலும் 15 ஆவது சட்டப்பேரவையில் அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாளான இன்று (17/02/2020) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு பேரவையில் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் சாவித்திரி அம்மாள், ராஜேந்திர பிரசாத், ராஜசேகரன் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்த தூண்டி விட்டது யார்? என்று கேள்வி எழுப்பினார். வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தியதால் வன்முறை களமாக மாறி விட்டது. டெல்லியை போல தமிழகமும் போராட்ட களமாக மாறி வருகிறது. போராட்டம் நடைபெற்று வரும் வண்ணாரப்பேட்டைக்கு என்று முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றார்.
இதற்கு சபாநாயகர் தனபால், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரவையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று கூறி திமுகவின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும் வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடி குறித்து மட்டும் சட்டப்பேரவையில் பேசலாம் என்று சபாநாயகர் கூறினார்.
மேலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று எழுத்துப்பூர்வமாக ஸ்டாலின் பதில் கொடுத்து விட்டதாக பேரவையில் சபாநாயகர் அறிவித்துள்ளார்.