திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் மலைக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த ஒன்பது வயதான மாணவி, திடீரென பள்ளியின் பின்புறத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர், “என் மகள் சாவுக்குப் பள்ளியின் ஆசிரியர்கள்தான் காரணம்” என்று கூறி போலீசில் புகார் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேரை போலீசார் தீவிர விசாரணை செய்தும்வருகிறார்கள்.
அதோடு மாணவி சாவுக்கு என்ன காரணம் என போலீசார் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள். அப்படியிருந்தும், குற்றவாளிகள் யார் என்று கடந்த ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவருகிறார்கள். இந்நிலையில், திடீரென பள்ளிக்கூடத்தைப் புதுப்பிப்பதற்காக தொழிலாளர்களைவிட்டு பள்ளிக்கூடத்திற்குப் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் களமிறங்கியது. இந்த விஷயம் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காதுக்கு எட்டவே, “மாணவியின் சாவுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யாமல், பள்ளிக்கூடத்தை சுத்தப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். அதனால் அந்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று குரல் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பள்ளியின் பராமரிப்பு பணிகள் மற்றும் பெயிண்ட் அடிக்கும் வேலைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவி மரணத்தின் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் மெத்தனம் காட்டிவருகிறார்கள் என்று கூறி மேல் மலைப்பகுதியில் உள்ள கூக்கள் கிராமத்து மக்கள், மாணவி மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அதனால் எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விஷயம் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்குத் தெரியவே, உடனே அந்த கூக்கல் கிராம மக்களை சமாதானப்படுத்தி கூடிய விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம் என உறுதி கூறியதின் பேரில், உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் மாணவி சாவில் மர்மம் நீடிப்பதால், போலீசாரும் உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்கள். இருந்தாலும் மாணவியைக் கொடூரமாக மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்டது மேல்மலை மற்றும் கீழ்மலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது கூக்கல் கிராமத்தைத் தொடர்ந்து, மற்ற பகுதியில் உள்ள மலைக் கிராம மக்களும் மாணவிக்கு ஆதரவாக கூடிய விரைவில் தொடர் போராட்டத்தில் குதிக்க தயாராகிவருகிறார்கள்.