தமிழக அரசு தற்போது மீண்டும் ஆறுகளில் மணல் எடுக்க திட்டமிட்டு குவாரிகள் அமைத்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ள போலிசாரின் பாதுகாப்புடன் பாதைகள் அமைத்துள்ள நிலையில் முதல்கட்டமாக அழியாநிலை கிராமத்தில் மணல் அள்ளக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அழியாநிலை கிராமத்தில் வெள்ளாற்றில் கடந்த ஆண்டுகளில் மணல் அள்ளிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் 12 ஏக்கர் பரப்பளவில் மணல் அள்ள அனுமதி அளித்து பாதை அமைக்கப்பட்டது. அன்றே திரண்ட பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் அதன் பிறகும் மணல் எடுக்கும் பணி நிறுத்தப்படாது என்று தகவல் வெளியானதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பல கிராமங்களின் கூட்டம் கூடி 16 ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அதன்படி இன்று காலை 10 மணி முதல் அழியாநிலை கிராமத்தில் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக ஆலமரத்தடியில் போராட்டத்தை தொடங்கியது போல அழியாநிலை கிராமத்திலும் ஆலங்குடி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் த.மா.க, ம.ஜ.க மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் இயற்கை ஆர்வலர்கள் ஆதரவுடன் கிராம மக்கள் 1000 பேர் போராட்டத்தை தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் கூறும் போது.. வெள்ளாற்றில் எங்கும் மணலை திருடிவிட்டார்கள் இன்னும் இருப்பது முனிக் கோயில் திடல் மட்டும் தான் அந்த இடத்தில் கொஞ்சம் மணல் இருப்பதால் குடிதண்ணீராவது கிடைக்கிறது.
மணல் அள்ளிய ஆற்றில் வேலிக்கருவை தான் முளைத்திருக்கிறது. இப்போது அந்த முனிக்கோயில் திடலையும் வெட்டி அள்ள திட்டம் தீட்டிவிட்டார்கள். அந்த பகுதியில் இப்போதுபோய் மணலை தோண்டினால் தண்ணீர் வரும். அப்படியான இடத்தை அழிக்க எப்படி மனம் வருகிறதோ என்றவர்கள். எங்கள் கிராம காவல் தெயவமான முனி இருக்கும் திடலை அழிக்கவிடமாட்டோம். நெடுவாசலில் மண்ணை காக்க மக்கள் போராடடினார்களே அதே போல மணலை காக்க, குடிதண்ணீரை காக்க தொடர்ந்து போராடுவோம் என்றனர்.
மெய்யநாதன் எம்.எல்.ஏ கூறும் போது. மணலை அள்ளி வறட்சியை ஏற்படுத்திவிட்டு சாப்பிடும் சாப்பாட்டுக்கு எங்கே போவார்கள். மணலை வெளிமாநிலங்களுக்கு கடத்தி விற்க திட்டமிட்டு தான் இந்த குவாரிகள் அமைக்கப்பட்டு வருகிறது. என் தொகுதியில் உள்ள அழியாநிலை குவாரியை மக்களை கொண்டே தடுப்போம். நெடுவாசலில் எப்படி இந்த ஊர் வேண்டாம் என்று ஜெம் நிறுவனம் ஓடியதோ அதே போல அழியாநிலையில் மணல் குவாரியே வேண்டாம் என்று அதிகாரிகளும் ஒப்பந்தக்காரர்களும் ஓடும் வரை மக்கள் போராட்டம் ஓயாது. சமாதானம் பேச அதிகாரிகள் அழைத்தார்கள் ஆனால் மக்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டோம். மணல் எடுக்கவில்லை என்று உறுதி அளித்தால் மட்டுமே பேச்சுவார்த்தையும் போராட்டம் கைவிடுவதும் நடக்கும் என்றார்.
நெடுவாசல் போராட்டத்தில் ஆலமரத்தடிக்கு ஆதரவு கொடுக்க வந்தவர்களை வரவேற்று உணவளித்தது போல அழியாநிலை ஆலமரத்தடிக்கு வருவோரையும் வரவேற்று உணவளித்து வருகின்றனர்.
மண்ணையும், மணலையும், காக்க கூட போராடித்தான் ஆகவேண்டிய நாட்டில் பிறந்துவிட்டோம். போராடித்தான் ஆகவேண்டும்..