கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியில் வசித்து வருபவர் மனோகரன். இன்று காலை அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்ட அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான முரளி என்பவரிடம் தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அங்குச் சென்ற முரளி குளியல் அறையின் ஒரு மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு ஏற்கனவே தான் கொண்டு சென்றிருந்த பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார்.
பின்னர், அதனை வனப்பகுதிக்குள் விடுவதற்காக இருந்த போது பிடிபட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்க துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முரளி அதே பகுதியில் ஒரு ஓரமாக அந்தப் பையை வைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு சுமார் 36 குட்டிகளை ஈன்றுள்ளது.
இதனையடுத்து பாம்பினை குட்டிகளுடன் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாகவும், இந்தியாவிலேயே மிக கொடிய விஷமுடைய பாம்பு வகையான இந்தக் கண்ணாடி விரியன் பாம்பு அதிக எண்ணிக்கையிலான குட்டி போடும் இனத்தைச் சார்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.