கோடை இளவரசியான கொடைக்கானலில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளை திறக்க வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 1993 மாஸ்டர் பிளான் விதிகளுக்கு உட்படாத கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் 500க்கும் மேற்பட்ட விடுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. இதில் வழிபாட்டு தலங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என கூறியிருந்தது.
ஆனால் பூட்டிய விடுதிகளை திறக்க உரிமையாளர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டும் பலன் அளிக்காததால் நேற்று கடையடைப்பு போராட்டத் தில் குதித்தனர். இதில் ஆளுங்கட்சியை தவிர்த்து அனைத்து எதிர் கட்சியினரும், சங்கங்களும் பெரும் திரளாக பங்கேற்றனர். நகரில் உள்ள அனைத்து கடைகள் விடுதிகள் அடைக்கப்பட்டு இருந்தது. இந்த கடை அடைப்பு போராட்டத்தால் சுற்றுலா பயணிகள் உணவு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தினரின் ஊர்வலம் மூஞ்சிகள்லில் துவங்கி ஏரியில் முடிந்தது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு நகராட்சி அலுவலக பகுதியில் குவிந்த போராட்டக்குழுவினர் கமிஷனுக்கு எதிராக கோஷமிட்டனர். கூட்டத்தில் பேசிய "நிர்வாகிகள் விடுதிகளுக்கு கவனிப்பு பெற்றுக்கொண்டு நகராட்சி அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர்'" விதிமீறல் கட்டடங்களை ஒழுங்குபடுத்த சட்ட மசோதா இயற்றவேண்டும், வழிபாட்டு தலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், மக்களின் கருத்தறிந்து மாஸ்டர் பிளான் கொண்டுவரவேண்டும், 1993 பிந்திய கட்டடங்களுக்கு விலக்கு அளித்து தற்போதைய கட்டடங்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்த வேண்டும் என்றனர்.
இந்த கடையடைப்பு போராட்டத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் கலந்து கொண்டு பேசும்போது, கொடைக்கானலில் சீல் வைத்த விடுதிகளை ஒழுங்குபடுத்த சட்டசபையில் தீர்மானம் வைக்கப்பட்டது. அரசு இங்குள்ள பிரச்சினைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதன்பின் கடைஅடைப்பு போராட்டத்தில் குதித்த போராட்ட குழு பொறுப்பாளர்கள் சிலர் அங்குள்ள ஆர்டிஓ சுந்தரராசனிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த போராட்டம் கடை அடைப்பு மூலம் கோடைகானலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்க இடம் இல்லாமலும் உணவு பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்டவாரே திருப்பி சென்றனர்.