சேலத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக நள்ளிரவுக்கு மேல் மழை கொட்டித் தீர்த்தது. தமிழகத்தில் செப். 15ம் தேதி முதல், வெப்பச்சலனம் காரணமாக வடமாவட்டங்களில் பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப். 15) அன்றே சேலத்தில் மாலை நேரத்திலும், அதன்பிறகு இரவிலும் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக நள்ளிரவைக் கடந்து 1.15 மணியளவில் (அதாவது 19ம் தேதி அதிகாலை) மழை பெய்யத் தொடங்கியது. மழை தொடங்கிய முதல் ஐந்து நிமிடம் வரை லேசாக பெய்தது. நேரம் ஆக ஆக மழை வெளுத்து வாங்கியது. 20 நிமிடத்தில் மழையின் வேகம் குறைந்து. அதன்பிறகு லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது.
சேலம் மாநகரம் மட்டுமின்றி ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, நரசிங்கபுரம், இடைப்பாடி, சங்ககிரி, ஓமலூர், தாரமங்கலம் என மாவட்டம் முழுவதுமே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சேலம் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. ஒருபுறம் மேட்டூர் அணை நிரம்பி, டெல்டா பாசனத்திற்கும் போதிய தண்ணீர் கிடைத்துள்ள நிலையில், சீரான இடைவெளியில் பரவலாக பெய்து வரும் மழையும் நடப்பு ஆண்டில் விவசாயத்திற்கு பெருமளவில் கைகொடுக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.
மழை நிலவரம்:
செப். 18ம் தேதி நிலவரப்படி, சேலம் மாவட்டத்தில் கரியகோயில் பகுதியில் அதிகபட்சமாக 21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. எடப்பாடியில் 17, பெத்தநாயக்கன்பாளையத்தில் 14 மி.மீ. மழையும், மாவட்டம் முழுவதும் 108.7 மி.மீ. மழையும் பெய்துள்ளது. செப். 17ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் 376.9 மி.மீ., மழையும், செப். 16ம் தேதி 189.9 மி.மீ., மழையும், செப். 15ம் தேதி 142.7 மி.மீ. மழையும், செப். 14ம் தேதி 331.4 மி.மீ. மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.