Skip to main content

விரைவில் நெடுவாசலில் போராட்டம் - வடகாடு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

Published on 12/05/2018 | Edited on 12/05/2018
neduvasal

   

நெடுவாசல் கிராமத்தில் விரைவில் மறு போராட்டம் நடத்தப்படும் என்று வடகாட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


     புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அறிவித்ததுடன் போராட்டம் தொடங்கியது. இந்த நிலையில் திட்டம் வராது என்று மத்திய மாநில அமைச்சர்கள் உறுதியளித்து போராட்டத்தை வாபஸ் பெற செய்தனர். ஆனால் அதன் பிறகு மத்திய அரசு  தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததால் மறு போராட்டம் நெடுவாசலை சுற்றி வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி மற்றும் பல கிராமங்களில் நடந்தது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு போட மாட்டோம் என்று சொன்னாலும் தற்போது கீரமங்கலத்தில் 7 பேர், வடகாடு 13, ஆலங்குடியில் 42 என 62 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அதனால் போராட்டக்குழுவினர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார்கள்.


    இது குறித்து நெடுவாசல் போராட்ட உயர்மட்டக்குழு மற்றும் கீரமங்கலம், வடகாடு சுற்றுவட்டார கிராம மக்களின் ஆலோசனைக் கூட்டம் வடகாடு கிராமத்தில் ஒரு தனியார் மண்டபத்தில் உயர்மட்டக்குழு தலைவர் முன்னால் எம்எல்ஏ புஜ்பராஸ் தலைமையில் ஆலங்குடி எம்எல்ஏ மெய்யநாதன், முன்னால எம்எல்ஏ ராஜசேகரன், உயர்மட்டக்குழு தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
  

 கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை போல மாவட்ட நிர்வாகமும் ஏமாற்றி வருகிறது. ஆழ்குழாய் கிணறுகளை அகற்றுவதாகவும் போராடியவர்கள் மீது வழக்கு பதிவு இருக்காது என்றும்  மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. ஆனால் இப்போது வரை எதையும் செய்யவில்லை என்றனர்.


   தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.   போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பதை மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராக செல்லும் நபர்களுடன் ஏராளமானோர் பேரணியாக செல்ல வேண்டும்.


  வழக்குகளை திரும்ப பெறவில்லை என்றாலும் அதே போல ஜெம் நிறுவனம் ஒதுங்கியது போல மத்திய அரசும் ஒதுங்க வேண்டும் அதற்கு மாநில அரசு அழுத்தும் கொடுக்க வேண்டும்.


 இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் அனைத்துகட்சி தலைவர்கள், அமைப்புகள், இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொள்ளும் பிராமாண்ட போராட்டம் நெடுவாசலில் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சார்ந்த செய்திகள்