
“18 MLA-க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்து எங்களுக்கு கவலையில்லை; மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தமிழகத்தின் 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் அறிவிப்பு செல்லும் என்றும் இடைத்தேர்தல் நடத்துவதற்கும் தடையில்லை என்று கூறியிருப்பது பற்றி உங்களின் கருத்து?
ஸ்டாலின்: தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையிலே ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். ஜனநாயகத்தினுடைய நெறிமுறைகள் போற்றிட வேண்டும் என்பது தான் தி.மு.கழகத்தினுடைய கொள்கை. சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு இன்று வெளிவந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பை பொறுத்தவரையிலே, அ.தி.மு.கவின் ஒரு அணிக்கு சாதகமா? இன்னொரு அணிக்கு பாதகமா? என்பது அவர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை. எனவே, அதுபற்றி தி.மு.கழகம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும், ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட முடியாத நிலையில் அந்த இரண்டு தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. ஆகவே, அந்த இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல இன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலே 18 தொகுதிகளும் மக்கள் பிரதிநிதி இல்லாத சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. எனவே, 18-ம் ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த 2 தொகுதிகளையும் சேர்த்து 20 தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் அந்த தேர்தலைப் பொறுத்த வரையில் இன்றைக்கு இருக்கக்கூடிய மக்கள் தி.மு.கழகத்திற்கு பெருவாரியான வகையில் ஆதரவு தர தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, உடனடியாக இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
செய்தியாளர்: 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பை எதிர்பார்த்து தான், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையா?
ஸ்டாலின்: நாங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை, எதைப் பற்றியும் கவலைப்படவும் இல்லை, எந்த நேரத்திலும் மக்களை சந்திப்பதற்கு தி.மு.கழகம் தயாராக இருக்கிறது. இவ்வாறு கூறினார்.