ஜவுளி தொழில் ஒருநிலையற்ற தன்மைக்கு கொண்டு சென்று விட்டது மத்திய பா.ஜ.க.அரசு என தொடர்ந்து வேதனையுடன் குரல் எழுப்பி வருகிறார்கள். ஜவுளி உற்பத்தியாளர்களும், அத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களும்.
கடந்த எட்டு வருட பாஜக ஆட்சியில் நூல் விலை ஏற்றம் என்பது 300 மடங்கு கூடியுள்ளது. உதாரணத்திற்கு பாஜக ஆட்சிக்கு முன்பு 40 நெம்பர் நூல் 10 கிலோ 30 ரூபாய் என்றால் இப்போது 1000 ரூபாய். இதனால் உற்பத்தியாளர்கள் தொடங்கி தொழிலாளர்கள் வரை அவர்களின் வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. தொடர் போராட்டத்தால் இப்போது நூல் விலை ஓரளவு குறைந்துள்ளது. இதுவும் இப்போது உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் ஏற்கனவே இருந்த விலையில் நூலை வாங்கி துணி உற்பத்தி செய்துள்ளார்கள். ஆனால் இப்போது உற்பத்தி செய்யப்பட்ட ரகங்களின் விலை பழைய விலைக்கு இல்லாமல் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உற்பத்தி செலவே நஷ்டம் என மீண்டும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் என மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த விசைத்தறிகளில் காட்டன் துணி, ரயான் துணி உற்பத்தி நடைபெறுகிறது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியாகி வந்தது. இந்நிலையில் ரயான் துணிகளின் விலை குறைந்துள்ளது. மார்க்கெட்டில் ரயான் துணி உற்பத்தி செய்த விலையை விட குறைவாக விற்பனை ஆகிறது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் இதனைச் சமாளிக்கும் வகையில் சென்ற 3ஆம் தேதி முதல் அவர்கள் உற்பத்தியை நிறுத்தி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறிகளின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து ஒரு வாரமாக நீடித்து வருகிறது. இந்த போராட்டம் காரணமாக ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் தினமும் ரூபாய் 6 கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கி உள்ளது. இதுவரை சுமார் 50 கோடி ரூபாய் வரை ஜவுளி விற்பனை மற்றும் உற்பத்தி வியாபாரம் முழுமையாக முடங்கியுள்ளது.