மத்திய பா.ஜ.க. மோடி அரசு இரண்டாவது முறையாக இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. மக்கள் நலன் சார்ந்து கொள்கை முடிவுகள் எடுக்காமல் கார்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு சாதகமான நடவடிக்கைகளிலேயே தொடர்ந்து ஈடுபடுவதாக எதிர்கட்சிகளும் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகிறது.
இந்நிலையில் லாபகரமாக இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை மெல்ல மெல்ல தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விரைவில் தனியாருக்கு தாரைவார்க்கும் அபாய நிலை உள்ளது. இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வருகிற 31ம் தேதி மற்றும் 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இந்திய அளவில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 20 சதவீதம் அதிகரித்து கொடுக்க வேண்டும். வாரத்தில் வேலை நாட்கள் ஐந்தாக மட்டுமே இருக்கவேண்டும். பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர வேண்டும் என12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரிகள் ஊழியர்கள் தனியார் துறை வங்கி பணியாளர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். நாடு முழுக்க 10 லட்சம் பேர் இந்த ஸ்டைக்கில் ஈடுபடுகிறார்கள் இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்தனை முடங்க உள்ளது.
"மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. எங்களது கோரிக்கைகளை முன்வைத்து மத்திய நிதி அமைச்சக உயர் அதிகாரிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த கோரிக்கைகளையும் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது ஆகவே தான் இந்த இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். கார்ப்பரேட் மற்றும் பெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட கடனை வசூல் செய்யாமல் அதை தள்ளுபடி செய்து அல்லது வரா கடன் என அறிவித்து பணிக் காரர்களுக்கு சலுகை காட்டும் அரசு மக்களுக்கு பணி செய்யும் பணியாளர்கள் நலனில் துளியும் அக்கரை காட்டாமல் வீதியில் இறங்கி போராட வைக்கிறது." என்றார் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத் தலைவரான வெங்கடாஜலம்.