Skip to main content

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 'இந்தி'யில் குறுஞ்செய்தி-அடுத்தகட்ட சர்ச்சை!!

Published on 04/10/2020 | Edited on 04/10/2020
Short message in 'Hindi' if booking train tickets

 

தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.  ஆளும் கட்சியான அ.தி.மு.க கூட தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என தெளிவாக தெரிவித்திருந்தது. புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியிருந்த சமயத்தில் கோவையில் மாநகராட்சியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள விருப்பமா? தொழில் கல்வி மேற்கொள்ள மாணவருக்கு விருப்பம் உள்ளதா? போன்ற கேள்விகள் எழுந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் அக்டோபர் 2 (நேற்று) காந்தி ஜெயந்தி அன்று பள்ளிகளில் நடைபெறும் வினா விடை போட்டிக்கான சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கையில் போட்டியானது ஆங்கிலம் அல்லது இந்தியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

 

TT


இந்நிலையில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பொழுது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக வரும். எப்பொழுதுமே ஆங்கிலத்தில் இந்த குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியில் இந்த குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வி என்பவர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவருக்கு டிக்கெட் தொடர்பான குறுஞ்செய்தி இந்தியில் வந்துள்ளது. இந்தி தெரியாததால் அவர் இதுகுறித்து நாகர்கோவில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாகர்கோவில் ரயில் பயணிகள் நலச் சங்கம் தற்பொழுது மத்திய ரயில்வே துறை அமைச்சகம், அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

'நிறைய மாநிலங்களில் இந்தி தெரியாத மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பினால் அவர்களுக்கு என்னவென்றே புரியாது. எனவே அவர்களுக்கு புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கின்றது. எனவே சேவை என்பது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது' என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 'இந்தி திணிப்பு' குறித்து தமிழகத்தில் அடுத்தகட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்