கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொடியம்பாளையம் கடற்கரைப் பகுதிக்கு அவருடைய நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கடலில் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென பாறை போன்ற ஒரு பொருள் குமாருக்குத் தென்பட்டுள்ளது. அதை எடுத்துப் பார்க்கும்போது வித்தியாசமாகத் தெரிந்ததால் அதைத் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
சிறிது நாட்கள் கழித்து வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த குமார், அந்தப் பொருளைத் தூக்கி வெளியே போட்டுள்ளார். அப்போது, தண்ணீரில் விழுந்த அந்த கல் போன்ற பொருள் மிதந்து மேலே வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், அதைத் தூக்கி வந்து எடை போட்டு பார்த்ததில் 1 கிலோ 200 கிராம் இருந்துள்ளது.
இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி முத்துக்குமார் என்பவரிடம் அந்த மிதக்கும் கல்லைக் கொடுத்துள்ளார். மிதக்கும் கல்லைப் பார்த்த முத்துக்குமார் மீடியாவில் செய்தி வெளியிட்டார். இந்நிலையில், புராணக் கதைகளில் பேசப்பட்டு வந்த மிதக்கும் கல் குறித்த செய்தி சோசியல் மீடியா முழுவதும் வேகமாகப் பரவியது.
இது குறித்துத் தகவலறிந்த வனத்துறையினர் இன்று காலை முத்துக்குமாரின் கடைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் பேசும்போது “இந்த மிதக்கும் கல் குமிழி என்ற கல் வகையைச் சேர்ந்ததாகக் கூட இருக்கலாம். அப்படி இல்லையென்றால் திமிங்கலத்தின் எச்சிலாகக் கூட இருக்கலாம் என்று தகவல் பரவியது. ஆனால், இந்த நவீன யுகத்தில் வீடு கட்டுவதற்குக் கூட இந்த மிதக்கும் கல்லைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் இந்த மிதக்கும் கல்லை ஆய்வு செய்த பிறகுதான் முழுமையான தகவல் வெளியிட முடியும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.