Published on 23/05/2019 | Edited on 23/05/2019
திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட ஒரு சில ஆண்டுகளாக செய்த களப்பணி அவருக்கு கை கொடுத்திருக்கிறது என்பதையே வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிப்படுத்துகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளாக இருந்த போதும் தொடக்க காலங்களில் இலக்கியம், பத்திரிகை துறையில் மட்டுமே ஆர்வத்தை காட்டினார் கனிமொழி.
அதன் பிறகு 2007-ம் ஆண்டு திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வானார். 2013-ம் ஆண்டு 2-வது முறையாக ராஜ்யசபா எம்.பி.யானார். இருப்பினும் திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான அந்தஸ்து அவருக்குக் கிடைக்கவில்லை. கனிமொழியின் எதிர்பார்ப்பாக அது இருந்தும் அது பற்றி அவர் பெரிதும் வெளிப்படுத்திக் கொண்டதும் இல்லை. இந்த நிலையில் திமுக வேட்பளராக தூத்துக்குடியில் களம் இறங்கிய கனிமொழி வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே முன்னிலை பெற்று வருகிறார்.இதன் மூலம் அவரது வெற்றி வாய்ப்பு உறுதிப்படுத்த படும் என்று கூறிவருகின்றனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை பின்னடைவை சந்தித்து வருகிறார்.