கஜா புயல் தாக்கி 3 மாதங்களுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் கொடுத்து முடிக்கவில்லை.
இன்னும் சாலை மறியல், முற்றுகை என போராட்டங்கள் நடந்து கொண்டே உள்ளது. கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என்று மீண்டும் மனு கொடுக்க பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள்.
இந்த நிலையில்தான் நேற்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த குளத்தூர் தாலுகா கோட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண் பார்வையற்ற விவசாய கூலி தொழிலாளி ஜெயராமன் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கண் பார்வை இல்லை என்றாலும் கூலி வேலை செய்கிறேன். கஜா புயலில் என்வீடு சேதமடைந்தது அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பம் செய்தேன்.
நிவாரணப் பொருட்கள் கிடைத்தது ஆனால் நிவாரண தொகை கிடைக்கவில்லை என்பதை வட்டாட்சியரிடம் முறையிட்டேன் பலனில்லை. கிராம நிர்வாக அலுவலரிடம் போனால் கிராம உதவியாளர் தனத்தை பார்க்கச் சொன்னார். கிராம உதவியாளர் தனமோ அரசு நிவாரணம் வேண்டும் என்றால் ரூ 1000 லஞ்சம் கொடுத்தால் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக சொல்கிறார். என்னால் லஞ்சம் கொடுக்க வசதி இல்லை அதனால் அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அரசு நிவாரணம் வழங்க விண்ணப்பம் வாங்கும் அரசு ஊழியர்கள் பணம் பறிக்கும் சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களை ரொம்பவே பாதித்துள்ளது.