வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், சென்னையில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ மழையும், கொளத்தூரில் 15 செ.மீ மழையும், திருவிக நகரில் 15.4 செ.மீ மழையும், அம்பத்தூரில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை ஆலந்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும். அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வாக்கில் புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களில் இன்று (30.11.2023) முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனக் கூறப்பட்ட நிலையில், சற்று தாமதமாக அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.