பெங்களூரில் இருசக்கர வாகனத்தை திருடியவர்களை ஜிபிஎஸ் மூலம் பின்தொடர்ந்து திருப்பத்தூரில் வாகனத்தை கைப்பற்றியுள்ளார் வாகனத்தின் உரிமையாளர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபெருமாள் என்பவர் பெங்களூரில் ஐடி துறையில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் பொருத்தி அதனை மொபைல் மூலம் கண்காணித்து வந்துள்ளார். நேற்று ஜெயபெருமாள் பணியை முடித்துக் கொண்டு அதிகாலை பெங்களூருக்கு வெளியில் இருக்கும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், காலையில் எழுந்து மொபைல் போனை ஆன் செய்த பொழுது இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் கருவியின் மூலம் வாகனத்தைப் பின்தொடர்ந்து பார்க்கையில் பெங்களூரை கடந்து வாகனம் சென்று கொண்டிருந்தது தெரிந்து அதிர்ந்து காரின் மூலம் பின்தொடர்ந்துள்ளார்.
ஆம்பூர் அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் ஒரு மணி நேரமாக வாகனம் நிறுத்தப்பட்டு இருப்பதை அறிந்து அந்த பகுதிக்கு நண்பர்களுடன் சென்ற ஜெயபெருமாள் வாகனத்தை மீட்டார். மேலும் திருட்டில் ஈடுபட்ட ஐந்து நபர்களை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார். ஆம்பூர் அடுத்த பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் பெங்களூரில் வாகனத்தை திருடி வந்ததை ஒப்புக்கொண்டதன் பேரில் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.