நாமக்கல் அருகே, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே, காரைக்குறிச்சி புதூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ராமமூர்த்தி என்பவர், கடந்த பத்து ஆண்டுகளாக ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். அவர்கள், அக். 28ம் தேதி திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க மற்ற ஆசிரியர்கள் ஓவிய ஆசிரியரை ஒரு வகுப்பறைக்குள் வைத்துப் பூட்டி விட்டனர்.
தகவல் அறிந்த ராசிபுரம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். ஓவிய ஆசிரியரைக் கைது செய்யக்கோரி காவல்துறையிடம் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்ததோடு, அவரைப் பூட்டி வைத்துள்ள அறைக்கதவை திறக்கவும் முற்பட்டனர். நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், டிஎஸ்பி தன்ராஜ், காவல் ஆய்வாளர் சுகவனம், பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்தினர்.
ராமமூர்த்தி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து ஓவிய ஆசிரியர் ராமமூர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.