தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையைத் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (27/04/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது...
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்: ஆக்சிஜன் அலகுகளைத் தவிர தாமிரம் உட்பட வேறு எந்த அலகுகளையும் ஸ்டெர்லைட் இயக்கக்கூடாது.
மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்: உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை ஸ்டெர்லைட் எங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள்தான் மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுப்போம். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாட்டைப் பொறுத்து ஆக்சிஜனைப் பிரித்துக் கொடுப்போம்.
நீதிபதிகள்: அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கம், நிர்வாகம் இருக்கலாம். ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு விநியோகிப்பதைத் தடுக்கக் கூடாது. உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்குவதே முறை என ஏற்கனவே ஒரு உத்தரவு உள்ளது.
தமிழக அரசு வழக்கறிஞர்: ஆக்சிஜன் உற்பத்தியில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கோருகிறோம்.
வேதாந்தா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர்: தமிழக அரசின் கண்காணிப்பு குழுவில் ஸ்டெர்லைட் ஆலைப் பகுதி மக்கள் இடம்பெறக் கூடாது. உள்ளூர் மக்களால் எங்களுக்கு ஏற்கனவே நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்டோர் தரப்பு வழக்கறிஞர்: மிகவும் மோசமாக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட்டைத் திறக்கக்கூடாது.
நீதிபதிகள்: அரசு அதிகாரிகள், நிபுணர்களைக் கொண்டதாகக் கண்காணிப்பு குழுவை அமைக்கலாமே. அந்தக் குழு அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் இதுகுறித்து பேசட்டுமே? ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் உள்ள கடினமான சூழலைத் தவிர்க்க வேண்டும்.
வேதாந்தா நிறுவனம் தரப்பு வழக்கறிஞர்: அனுமதி தந்த 10 நாட்களில் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்கிவிடுவோம். ஸ்டெர்லைட்டில் ஒருநாளைக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனைத் தயாரிக்க முடியும். உற்பத்தியாகும் ஆக்சிஜனை எந்த மாநிலங்களுக்குக் கொடுக்கச் சொல்கிறீர்களோ அங்கு தருவோம்.
மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்: ஸ்டெர்லைட்டைக் கண்காணிக்கும் குழுவில் உள்ளூர் மக்கள் இடம்பெறக் கூடாது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் நிபுணர் என்றெல்லாம் யாரும் கிடையாது.
தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்: ஸ்டெர்லைட்டைக் கண்காணிக்கும் குழுவை அமைப்பது தொடர்பாக நீதிமன்றமே உத்தரவிடலாம். ஆனால் குழுவில் உள்ளூர் மக்களும் இடம்பெறுவது கட்டாயம் என எங்களுக்குப்படுகிறது. ஏனென்றால், வாக்கு எண்ணிக்கை நேரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை விரும்பவில்லை. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பர் என்பதால், குழுவில் உள்ளூர் மக்களும் இடம்பெறலாம்.
மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர்: ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் தமிழகத்திற்கு முன்னுரிமை தர முடியாது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், “ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையைக் கண்காணிக்க ஐந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பதை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் தேர்வு செய்யலாம். தமிழக அரசிடம் ஆலோசித்து, உள்ளூர் மக்களில் இரண்டு பேரை குழுவில் இடம்பெற செய்யலாம். ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவைத் தவிர, மேலும் ஒரு குழுவையும் அமைக்க உத்தரவிடப்பட்டுட்டுள்ளது.
ஆக்சிஜனுக்காக மட்டுமே அனுமதி; வேதாந்தாவின் வேறு எந்த ஆதாயத்துக்காகவும் கிடையாது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசிடம்தான் கொடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்குத் தேவையான ஆக்சிஜனை மத்திய அரசுதான் பிரித்துக் கொடுக்கும். ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுக்க முடியாது; அளவை மத்திய அரசே முடிவு செய்யும். தேவைப்படும் ஆக்சிஜன் குறித்து சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகித் தீர்வு பெறலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து உச்ச நீதிமன்றம், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.