
பழனி முருகனின் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் ஏற்கனவே ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காக்கிகள் கைது செய்து தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்தும் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து பழனிக்கு விசிட் அடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கோவில் பணியாளர்கள் மற்றும் முன்னாள் பணியாளர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினார்.
இதையடுத்து பழனி கோவிலில் பணிபுரிந்த உதவி ஆணையர் புகழேந்தி மற்றும் சென்னை இந்து சமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் தங்கநகை சரிபார்ப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த தேவேந்திரன் ஆகியோரை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது செய்து அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
தொடந்து டி.எஸ்.பி.கருணாகரன் தலைமையிலான சில காக்கிகள் கடந்த ஒரு மாதமாக பழனியிலையே முகாம்போட்டு கோவில் பணியாளர்கள் மற்றும் கோவிலில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினார். அதில் முன்னாள் இணை ஆணையர் தனபாலுக்கும் அந்த ஐம்பொன் சிலை மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிந்ததின் பேரில் தனபாலை கைது செய்யும் முயற்சியில் டி.எஸ்.பி இறங்கி வந்தார்.
இந்த நிலையில் தான் எடப்பாடி அரசு திடீரென டி.எஸ்.பி. கருணாகரனை கோவை மின் திருட்டு தடுப்பு பிரிவுக்கு அதிரடியாக மாற்றிவிட்டனர். ஆனால் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் போலவே டிஎஸ்பி கருணாகரனும் நேர்மையானவர் அதனால் தான் முன்னாள் ஆணையர் தனபால் மேல் நடவடிக்கை எடுக்க பார்த்தார். ஆனால் தனபாலுக்கு எடப்பாடி வரை நெருக்கம் இருப்பதால் டி.எஸ்.பி. கருணாகரனை டிரான்ஸ்வர் செய்யவும் வழி செய்து விட்டார் என்ற பேச்சு காக்கிகள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.