தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் விழா திருச்சி ஜே.ஜே. பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் பள்ளிக் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், இந்த விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடத்தும் முதல்வர்கள், தாளாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “தமிழக மாணவர்களுக்கு 52,48,000 மடிக்கணினிகள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது. மழை நீர் சேகரிப்பு திட்டம் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்தான், அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிகள் தொடர் அங்கீகாரம் 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டு காலமாக மாற்ற வேண்டும் என்ற உங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.
கட்டிட அங்கீகாரம் வழங்கப்பட்டவுடன் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்குள் அரசு பள்ளிகளில் 7,200 ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும். தற்போது பள்ளிகளில் உள்ள 80,000 கரும்பலகைகள் அகற்றப்பட்டு ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும். 7,042 ஸ்மார்ட் லேப் (Lab) பள்ளிகளில் அமைக்கப்படும்.
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதுடன் அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது. எனவேதான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.” எனத் தெரிவித்தார். அரசு அறிவித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அரசு மருத்துவக் கல்லூரியில் பையில தேர்வு செய்யப்பட்ட மாணவ மாணவிகளை அமைச்சர் செங்கோட்டையன் சால்வையணிவித்து கௌரவ படுத்தினார்.
இந்த பணி ஆணை வழங்கும் விழாவில் 496 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் தொடர் அங்கீகாரம் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.