மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கியுள்ளது’ எனக் கூறினார்.
எம்.பி.பி.எஸ் உட்பட அனைத்து மருத்துவப் படிப்புகளுக்குமான பொது கலந்தாய்வை ஏன் நாடு முழுவதும் ஒரே வரையறையின் கீழ் நடத்தக்கூடாது என்பதன் அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வரைவு ஒன்றை தயார் செய்து அனுப்பி இருந்தது. இந்த கலந்தாய்வு மாநில உரிமை சார்ந்தது. இதனை ஏற்க முடியாது. மாணவர்களின் நலன் சார்ந்து இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்தன. பொது கலந்தாய்வை பொறுத்தவரை மாநிலங்களின் உரிமைகள் என்பதன் அடிப்படையில் மாநிலங்களே நடத்திக் கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுகள் கூறி வந்தன. மேலும் மத்திய அரசின் வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், “இந்த பொது கலந்தாய்வு என்ற சட்ட மீறல் எதிர்காலத்தில் மாநில அரசின் சட்டம் இயற்றும் திறனை தடுக்கும். மேலும் பின் தங்கிய மக்களுக்கு ஆதரவை வழங்க சிந்திக்கப்படும் எந்த சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இது பாதிப்பாக இருக்கும். இதன் அடிப்படையில் அரசின் சார்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு பொது கவுன்சிலிங் எனும் திட்டத்தை மாநில அரசின் சார்பில் எதிர்த்து கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த 2 தினங்கள் முன் மத்திய அரசு, பொது கலந்தாய்வு இல்லை, மாநில அரசுகளே கலந்தாய்வினை நடத்திக் கொள்ளலாம் எனும் வகையில் பதில் அனுப்பியுள்ளார்கள். முதலமைச்சரின் நடவடிக்கைகளால் மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மருத்துவத்துறைக்கு மாநில உரிமைகள் காக்கப்பட்டுள்ளது” என்றார்.