தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கட்டமைப்பு வசதிகளில் சுட்டிக் காட்டப்பட்ட சில குறைகள் சரி செய்யப்படாததைத் தொடர்ந்து அவற்றின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்புகளிலும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில் இன்று அமைச்சர் மா. சுப்ரமணியன்., ஸ்டான்லி, தருமபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடையில்லா சான்று வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “ஸ்டான்லி மருத்துவமனையில் சிசிடிவி கேமிராக்களும் பயோமெட்ரிக்குகளும் பழுதாகியுள்ளதாகச் சொல்லி இருந்தார்கள். அது எல்லாம் சரி செய்யப்பட்டு அதற்கான கடிதத்தை சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் நேரடியாகச் சென்று அக்கல்லூரியில் கொடுத்தார். இந்த நிலையில் அந்த என்.எம்.சி குழு மீண்டும் நேற்று ஆய்வுக்கு வந்து ஸ்டான்லி, தருமபுரி கல்லூரிகளில் நேரடி கள ஆய்வும் காணொளி ஆய்வு என்ற முறையிலும் சில நாட்கள் செய்தார்கள்.
நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கும் தருமபுரி அரசு கல்லூரிக்கும் அவர்கள் அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டார்கள். இந்த கல்லூரிகள் மேலும் ஐந்தாண்டுகள் நீடித்து இயங்குவதற்கு தடை இல்லை என்று அறிவித்துள்ளார்கள். அதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு இன்றோ நாளையோ வெளிவரும். திருச்சி கல்லூரியில் நாளை காணொளி வாயிலாக நடைபெறுகிறது. நாளை ஆய்வு முடிந்த உடன் அதற்கும் தீர்வு கிடைத்துவிடும்” எனக் கூறியுள்ளார்.