மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் பணம் செலுத்தாமல் சென்றதாக வாகன ஓட்டியை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என உள்ளூர் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறைக்காக திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மீண்டும் சென்னை செல்வதற்காக அவர்கள் இன்று கோவில்பட்டி - விருதுநகர் நான்கு வழிச்சாலை வழியாக திருமங்கலம் அடுத்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியைக் கடக்கும்போது நான்காவது பாதையில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மூன்றாவது பாதைக்கு வாகனத்தை கொண்டு செல்ல அங்கிருந்த ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் பிரபுவின் வாகனத்தில் பாஸ்ட் ட்ராக் கணக்கில் பணம் இல்லாததால் கார் வெகுநேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்பொழுது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் பிரபு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதமானது கைகலப்பாக மாறியது. இதனால் அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து பிரபுவை கடுமையாகத் தாக்கினார். தற்பொழுது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.