விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப., தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வாக்குப் பதிவு மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.