சேலத்தில், செல்போன் பேச்சு இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக கருதி, காவல் ஆய்வாளரை கன்னாபின்னாவென்று பேசிய சிறப்பு எஸ்.ஐ, உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
சேலம் நெய்க்காரப்பட்டி ஏரிக்காட்டைச் சேர்ந்தவர் செல்வம் (57). கிரானைட் தொழில் செய்து வருகிறார். இவருடைய வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 9 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் எஸ்.எஸ்.ஐ கோபால் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஆய்வாளர் ஜெகநாதன், சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். எதிர்முனையில் பேசிய எஸ்.எஸ்.ஐ கோபால், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விடுவதாகச் சொல்லி இருக்கிறார்.
காவல் ஆய்வாளர் ஜெகநாதன் செல்போன் பேச்சை துண்டித்து விட்டதாகக் கருதிய எஸ்.எஸ்.ஐ கோபால், என் சூழ்நிலை தெரியாமல் உடனடியாக வா என்று சொன்னால் எப்படி போவது? என்றதோடு, அவரைப் பற்றி ஆபாச வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்திருக்கிறார். அவர் விமர்சனம் செய்தது அனைத்தையும், காவல் ஆய்வாளர் ஜெகநாதன் எதிர்முனையில் செல்போனில் கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.
இதையடுத்து மீண்டும் எஸ்.எஸ்.ஐ கோபாலை தொடர்பு கொண்டு பேசிய ஆய்வாளர், தாங்கள் பேசியது தவறு என கண்டித்திருக்கிறார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வாளர் ஜெகநாதன் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதையடுத்து எஸ்.எஸ்.ஐ கோபாலை உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, சேலம் மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம், சேலம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.