Skip to main content

ஆண்டாள் கோவிலில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி.!- சர்ச்சையான ஆன்மீக விசிட்!

Published on 22/08/2020 | Edited on 22/08/2020

 

srivillipudhur andal temple visit theni mp raveendranath

 

 

தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் விருதுநகர் மாவட்டத்துக்கு  ‘ஆன்மிக விசிட்’ அடித்தது, அரசியலாக பார்க்கப்படுகிறது.

 

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பனிப்போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ‘ட்வீட்’ மூலம்,  இ.பி.எஸ். ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திய கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்ட பொறுப்பாளராக உள்ள விருதுநகர் மாவட்டத்துக்கு வந்த ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., இரண்டு தினங்களுக்கு முன், ராஜேந்திரபாலாஜி ஆலோசனைக் கூட்டம் நடத்திய அதே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆய்வு மாளிகையில், அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்தது, சர்ச்சையாகி உள்ளது. குறிப்பாக, ராஜேந்திரபாலாஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக நகரச் செயலாளர் இன்பத்தமிழன், ஓ.பி.ரவீந்திரநாத்தை சந்தித்து பேசியது, இம்மாவட்ட உட்கட்சிப் பூசலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

 

srivillipudhur andal temple visit theni mp raveendranath

 

இது ஒருபுறம் இருக்க.. ஏதோ ஒரு வேண்டுதலுடன்,  ஸ்ரீவில்லிபுத்தூர் -  செண்பகத்தோப்புக்கு வந்த ஓ.பி.ரவீந்திரநாத், தனது குலதெய்வமான வனபேச்சியம்மனுக்கு சாற்றுவதற்காக வஸ்திரம் அளித்துவிட்டு தரிசித்தார். அதெல்லாம் சரிதான்.. ஆனால்.. அவர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கும்பலாக சென்று வழிபட்டதுதான்,  கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்துவிட்டது.

 

“ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், கோவில் பூஜைகளில், அர்ச்சகர்கள், ஊழியர்கள் 5 முதல் 6 பேர் வரை மட்டுமே இருக்க வேண்டும். பக்தர்கள் என்ற பெயரில் யாரையும் அனுமதிக்கக்கூடாது. முதல்வர் மற்றும் பிரதமர் உத்தரவுப்படி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை அலுவலர்கள் எடுக்க வேண்டும். இல்லையெனில்,  கோவில் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட ஆளும்கட்சியினரை, ஆண்டாள் கோவிலுக்குள் அனுமதித்தது யார்? அவருக்காக பூஜையெல்லாம் நடந்திருக்கிறதே? மக்களுக்கு ஒரு நீதி? ஆளும்கட்சியினருக்கு ஒரு நீதியா?” என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பக்தர் ஒருவர் முன்வைத்த கேள்வியை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் செயல் அலுவலர் இளங்கோவனிடம் கேட்டோம்.

 

“இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நான் விடுப்பில் இருக்கிறேன். மக்கள் பிரதிநிதியான ஒரு எம்.பி. வரும்போது ‘வரக்கூடாது’ என்று எப்படி தடுக்க முடியும்? எம்.பி. போன்ற மக்கள் பிரதிநிதிகள், ஊரடங்கு காலத்தில், ஆண்டாள் கோவில் போன்ற பெரிய கோவில்களுக்கு வருவதை தவிர்க்கவேண்டும்.” என்றார். இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடெல்லாம் வெறும் பேச்சளவிலேயே இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்