பதிமூன்று உயிர்களை பலிவாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு, சரியாக கணிக்கத் தவறிய உளவுத்துறையின் பலவீனமும் ஒரு காரணமென அப்பொழுது தனிப்பிரிவு எஸ்.ஐ.யாக இருந்த முத்துவை மாற்றிய கையோடு, மாவட்ட எஸ்.பி. மகேந்திரன், ஆட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோரை மாற்றியது தமிழக அரசு. புதிய மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்.பி.யாக முரளிராம்பா-வையும் தூத்துக்குடிக்கு கொண்டுவர, இடமாற்றலாகி வந்து இரு அதிகாரிகளும் பதற்ற நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தற்பொழுது வரை பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றனர் என்பது கண்கூடான ஒன்று. ஆனால், இவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கவேண்டிய உளவுத்துறையோ இந்த சினிமா பாருங்கள்.! அந்த சினிமா பாருங்கள்.!! என வர்ணனையுடன் வழிக்காட்டுவது தான் வேடிக்கையே.!
விஷயம் இது தான்..!
தூத்துக்குடி மாவட்ட உளவுத்துறை தனிப்பிரிவு எஸ்.ஐ. முத்து இடமாற்றம் செய்யப்பட அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டவர் "க்யூ" பிரிவிலிருந்த உமையொருபாகன் எஸ்.ஐ.! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் இடைவெளி ஏற்ப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை சரி செய்தால் மிகவும் நன்மை பயக்கும் எனவும், பத்திரிகையாளர்களுக்கு தினசரி க்ரைம் செய்திகளையும், தகவல்களையும் கூற புதிதாய் " போலீஸ் பி.ஆர்.ஓ."வாக சத்யநாராயணன் எனும் எஸ்.ஐ.ரேங்கிலுள்ள அதிகாரியை நியமித்தது உளவுத்துறையான தனிப்பிரிவு. இதற்கென தனியாக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி அதில் பத்திரிகையாளர்களை இணைத்து, ஆரம்பத்தில் தினசரி தகவல்களை பகிர்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று, " ஸ்டார் விஜய் டி.வி.யில் தீரன் அதிகாரம் ஒன்று." படமும், கலர்ஸ் டி.வி.யில், "அந்தப் படத்திற்கான கலை நிகழ்ச்சி"யும் ஒளிப்பரப்பாகின்றது." என சினிமா பார்க்க, சினிமா பி.ஆர்.ஓ.போல் அழைப்பு விடுத்திருக்கின்றார் பி.ஆர்.ஓ.-வான சத்ய நாராயணன் எஸ்.ஐ..!! கோபப்பட்ட பத்திரிகையாளர்களோ, " இந்த கலவரச்சூழலில் இந்தக் குழுவில் ஏதாவது முக்கிய செய்தியினைப் பார்த்துத் தான் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றோம். ஏதாவது க்ரைம் செய்திப் பற்றிக் கேட்டால் கூடுதல் தகவல் தருவதில்லை. சினிமா பார்க்க கூப்பிடுவது எந்த வகையில் நியாயம்..?" என உளவுத்துறை தனிப்பிரிவு அதிகாரிகளிடம் கொக்கிப் போட, தற்பொழுது பிரச்சனை மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் சென்றிருக்கின்றது.