நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருவது வனத்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் சவாலாகி வருகிறது. குன்னூரில் பாரஸ்ட் ஸ்டேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீயானது நாளுக்கு நாள் வேக வேகமாக பரவி வருவது அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த முடியாததால் குன்னூரில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை தீயில் கருகி உள்ளன. வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் என மொத்தமாக 150 க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் தேனி மாவட்டம் போடி வனப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிச்சாங்கரை, ஊத்தாம் பாறை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னூர், பெரியூர் மலை கிராமத்தில் வனப்பகுதியில் தீப்பற்றக் காரணமாக இருந்த இருவர் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சின்னூர், பெரியூர் மலை கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரும் ஆண்டவர் என்பவரும் விவசாய கழிவுகளை கொட்டி தீ வைத்தபொழுது தீ வனப்பகுதிக்கு பரவியது விசாரணையில் தெரிவந்துள்ளது. கோடைக்காலம் என்பதால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது இயல்பான ஒன்று என கருதப்பட்டாலும் சிலரின் அத்துமீறலால் காட்டுத்தீ உருவாகும் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.