
ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் மில்லிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், நம்பியூர், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் சின்னரங்கன் (63). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் பல வருடங்களாக தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று, ஓய்வில் இருந்த சின்னரங்கன் கடந்த 10 நாள்களுக்கு முன்னர் தான் மீண்டும் வேலைக்குச் சென்றார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு வேலைக்குச் சென்ற சின்னரங்கன், நேற்று அதிகாலை 4 மணியளவில் தனக்கு காய்ச்சல் இருப்பதாகக் கூறிக்கொண்டிருந்தவர் திடீரென தனக்கு மயக்கம் வருவதாகக் கூறியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சின்னரங்கன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.