நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் பல ஒன்றிய, குழுக்களையும் தக்க வைத்துக் கொள்ளமுடியாமல் போனது ஆளும் அதிமுக வுக்கு. தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டுகளில் அதிமுகவுக்கு 7, பாஜக1, சுயேட்சை 1 என 9 இடங்களை அதிமுகவும் 6 இடங்களை திமுகவும் கைப்பற்றி உள்ளது.
இதில் அதிமுகவுக்கு சேர்மன் ஆகும் வாய்ப்பு இருந்தாலும் உள்கட்சி பிரச்சனையால் பறிபோகும் சூழ்நிலை உருவாகி பதவி ஏற்பு முடிந்து ஆள் கடத்தல் வரை சென்று கலவரமானது.

அதிமுக சேர்மன் வேட்பாளராக மாஜி சமஉ திருஞானசம்மந்தம் தன் மருமகள் சசிகலா ரவிசங்கரை முன்னிறுத்தி பதவி ஏற்று வெளியே வந்த அதிமுக கவுன்சிலர்களை தூக்க தயாராக நிற்க.. நான் தான் ஒ.செ அதனால நான்தான் சேர்மன் ஆகனும் அதை நினைத்து தான் ரூ 40 லட்சம் செலவு செய்து ஜெயித்திருக்கிறேன் என்று ஒ.செ துரைமாணிக்கம் மாஜியிடம் மல்லுக்கு நின்றார். சமூகத்தை வைத்து அரசியல் செய்வதாக ஒ.செ குற்றம்சாட்டினார்.

இந்த உள்குத்து கலவரத்தை உற்றுக் கவனித்த திமுக நிர்வாகிகள் அதிமுகவில் 7 வது வார்டில் வென்ற மாலா போத்தியப்பனை சேர்மன் ஆக்க திமுக உதவும் சேர்மன் ஆனதும் துணை சேர்மன் திமுகவுக்கு கொடுத்துட்டு கொஞ்ச நாள்ல திமுகவுல இணையனும் என்று ஒப்பந்தம் போட்டு ஆதரவு கரம் நீட்ட மற்றொரு அதிமுக கவுன்சிலரும் துணைக்கு வருவதாக சொன்னார். அதனால் எங்கம்மாவுக்கு தான் சேர்மன் பதவி வேண்டும் என்று மாலாவின் மகன் குமாரும் கலவரத்தில் கலந்துகொண்டு குரலை உயர்த்தினார். நாங்க சமூகத்தை வைத்து அரசியல் செய்றோம்ன்னு சொல்றீங்க அப்ப இது சமூகத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் இல்லயா? என்று மாஜி தரப்பு குரலை உயர்த்த ஒருவழியாக பதவி ஏற்ற கவுன்சிலர்கள் வெளியே சென்றனர்.
இந்த நிலையில் அதிமுகவுக்குள் இருந்த உள்கட்சி பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில், இன்று 11 ந் தேதி சேர்மன் தேர்தலுக்காக திமுக தரப்பு கவுன்சிலர்கள் 6 பேரும் அவர்களின் ஓட்டை வாங்க தயாராக வேட்பாளராக அதிமுக மாலா போத்தியப்பன் என மொத்தம் 7 கவுன்சிலர்கள் மட்டும் வந்திருந்தனர். ஆனால் அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் யாரும் தேர்தலில் கலந்துகொள்ள வரவில்லை. அதனால் நீண்ட நேரம் வரை காத்திருந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தேர்தல் நடத்த போதிய கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பை நோட்டிஸ் போர்டில் ஒட்டினார்கள். ஆளுங்கட்சியே தேர்தலை புறக்கணித்திருப்பதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.