தமிழ்நாட்டில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம். மூடிய பள்ளியில் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மொத்தம் 46 அரசுப் பள்ளிகளை மூடி சாதனை படைத்துள்ளது தமிழக அரசு.
அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆவுடையார்கோயில் ஒன்றியத்தில் சின்னபட்டமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என 2 அரசுப்பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்று மூடினார்கள். இதில் சின்னப்பட்டமங்களத்தில் அவசர அவசரமாக நூலகத்தையும் திறந்துவிட்டனர். ஆனால் குளத்தூரில் நூலகம் திறக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில்தான் பள்ளியை பூட்டிய நாளில் சக பத்திரிகை நண்பருடன் குளத்தூர் சென்று கிராமத்தினரை சந்தித்து அரசு பள்ளியின் அவசியங்கள் குறித்து பேசினோம். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மூடப்பட்ட பள்ளியை திறக்க எங்கள் குழந்தைகளை அழைத்து வருகிறோம் பள்ளியை திறக்க வேண்டும் என்று கிராமம் கூடி தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பிவை வைத்தனர். நாமும் தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்த நிலையில் மாணவர்கள் செர்ந்தால் பள்ளியை திறப்போம் என்றனர் அதிகாரிகள். அதன்படி 13 ந் தேதி 11 மாணவர்களுடன் பெற்றோர்களும், கிராமத்தினரும் பள்ளியில் காலை 9 மணி முதல் காத்திருந்தனர். 10 மணிக்கு அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச் செல்வம், மற்றும் வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் வந்து மாணவர்களின் வயது உள்பட அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு பள்ளியை திறந்தனர். அதே நேரத்தில் அங்கு வந்திருந்த நூலக அலுவலர்கள் நூலகம் திறக்கும் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த பள்ளி திறக்கப்பட்டதும் நாம் வழக்கம் போல பத்திரிகை நண்பருடன் அரசால் மூடப்பட்டு நூலகம் திறக்கப்பட்ட சின்னப்பட்டமங்களம் பள்ளிக்குச் சென்றோம். ஊருக்குள் நுழையும் முன்பே அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோரிடம் அரசுப் பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும். உங்கள் குழந்தையை அரசுப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டோம். தாராளமாக அனுப்புகிறேன். பள்ளியை திறக்க வழி செய்யுங்கள் என்றார்.
தொடர்ந்து பயணித்தோம்.. பள்ளி வளாகத்தில் மாடுகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது அருகில் இருந்த தேவாலயத்தில் பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் சென்று பள்ளியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் வீட்டு வாசலில் உள்ள பள்ளியை மூடிவிட்டு பணத்தை செலவு செய்து பல கி.மீ தூரத்திற்கு உங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டுமா? என்று நாம் பேச்சை தொடங்கியதும் பள்ளிக் கூடத்தை திறக்க வேண்டும் என்றனர். கிராம கூட்டத்தை கூட்டி கிராம தீர்மானம் எழுதி மாணவர்களின் பெயர் பட்டியலை கொடுத்தால் அதிகாரிகள் வந்து திறப்பார்கள் என்றோம். இந்தநிலையில்தான் தீர்மானம் எழுதிவைத்துவிட்டோம் என்றனர் அந்த பெண்கள்.
தொடர்ந்து இப்பள்ளியின் தொடக்க கால முன்னாள் மாணவரும், ஓய்வு ஆசிரியருமானஅருளானந்தம், கிராம தலைவர் தோமாஸ் உள்ளிட்டவர்களை தேவாலையத்தில் சந்தித்து அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறியதும் மூடிய பள்ளியை திறந்தே ஆகவேண்டும் என்பதை அழுத்தமாக சொன்னார்கள் கிராம மக்களுடன் இணைந்து.. கிராம மக்களால் எழுதப்பட்ட தீர்மானத்தை ஆவுடையார்கோயில் வட்டார கல்வி அலுவலரிடம் கொடுத்துவிட்டு பள்ளியை திறக்க அழைப்பு கொடுங்கள் வந்து திறப்பார்கள் என்று கிராம மக்களிடம் சொன்னதுடன் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நாம் தகவல் கொடுத்தோம்.
மாணவர்கள் சேர்க்கை இருந்தால் உடனே பள்ளியை திறக்கலாம் என்றனர். இந்த வாரத்திற்குள் தமிழ்நாட்டில் தமிழக அரசால் மூடப்பட்ட 2 வது அரசுப் பள்ளியை திறந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்பட்டோம். தமிழ்நாட்டில் மூடப்பட்ட 46 அரசுப் பள்ளிகளில் முதல் பள்ளியாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பள்ளி திறக்கப்பட்டுவிட்டது. 2 வது பள்ளியாக சின்னப்பட்டமங்களமும் திறக்கப்பட உள்ளது.
இதேபோல மற்ற மாவட்டங்களில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்க அந்தந்த கிராம இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்தால் திறந்துவிடலாம். நம் தலைமுறையில் பள்ளிகளை திறந்தோம் என்பது பெருமை. ஒரு பள்ளியை பூட்டினோம் என்பது அவமானம்.முயற்சி செய்யுங்கள் அரசால் மூடப்பட்ட 46 அரசுப்பள்ளிகளையும் திறப்போம்.