பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் புதுக்கோட்டையில் நடத்திய மறியல் போராட்டத்தில் 49 ஆண்கள் உட்பட 480 பேர் கைது செய்யப்பட்டன.
முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்குப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் ஓய்வூதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கடந்த 26,27,28 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக தமிழகம் முழுவதும் காத்திருக்கும் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்காததால் திங்கள்கிழமையன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பி.பாண்டி, மாவட்டச் செயலாளர் பெ.அண்பு, பொருளாளர் வி.அண்ணபூரணம், நிர்வாகிகள் துரை.அரங்கசாமி, ராஜமாணிக்கம், செல்லத்துரை, தங்கராசு மற்றும் 49 ஆண்கள் உட்பட 480 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை ஆதரித்து அரசுஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, பொருளாளர் கே.குமரேசன், இந்து அறநிலையத்துறை அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பாரதி உள்ளிட்டோர் பேசினர்.