Skip to main content

“நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல! தமிழர் இன உரிமை!

Published on 07/09/2017 | Edited on 07/09/2017

“நீட்” தேர்வு – சமூகநீதி மறுப்பு மட்டுமல்ல!
தமிழர் இன உரிமை! தஞ்சையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர் தோழர் பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டு உரிமைகளை மட்டுமல்ல, தமிழர் உயிர்களையும் தில்லி பறித்து வருகிறது. அந்தத் தொடர்ச்சியில் அரியலூர் அனிதா உயிரையும் பறித்துள்ளது! 

உச்ச நீதிமன்றத்தில் நடந்த “நீட்” வழக்கில், எடப்பாடி அரசை நம்பி அனிதா தமிழ்நாட்டுத் தரப்பில் சேர்ந்து வழக்கு நடத்தினார். நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நடப்பாண்டு மாணவர் சேர்க்கையில், “நீட்” தேர்வுக்கு தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என நம்பிக்கை ஊட்டினார்.

நம்ப வைத்துக் கழுத்தறுத்ததைப் போல் துரோகம் செய்த நடுவண் அரசும், தமிழ்நாடு அரசுமே தற்கொலை செய்து கொள்ள அனிதாவை தூண்டியவை!

“நீட்” என்பது மாணவரின் தகுதியைச் சோதிக்கும் தேர்வல்ல - மாநில உரிமையைப் பறிக்கும் தேர்வு! இதன் அடுத்த கட்டமாக “நீட்” தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், வடஇந்திய மற்றும் வெளி மாநில மாணவர்களைத் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பார்கள். 

தமிழ்நாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறையும். சேர்க்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும் தொலைதூர மாநிலங்களுக்குத் தூக்கி வீசுவார்கள்! 

இப்பொழுதுதான் “நீட்” என்பது தமிழர் தாயக உரிமையையும் - இன உரிமையையும்  பறிக்கும் தேர்வு முறை என்று உணர்ந்து கொண்டுள்ளோம். ஆனால் “நீட்” போன்ற தேர்வுகள் ஏற்கெனவே இந்திய அரசு நிறுவனங்களில், வேலையில் சேர்வதற்கு நடத்தப்பட்டு வருகின்றன. 

பி.எச்.இ.எல். போன்ற தொழில் நிறுவனங்கள், இரயில்வே, அஞ்சலகம், நடுவண் அரசின் வரி வசூல் அலுவலகங்கள், ஆவடி – திருச்சி படைத்துறைத் தொழிற்சாலைகள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றிற்கு ஏற்கெனவே அனைத்திந்தியத் தேர்வு வைத்து, தமிழ்நாட்டில் உள்ள அந்நிறுவனங்களில் தமிழ் மாணவர்கள் வெற்றி பெறாமல் தடுத்து வருகிறார்கள்.

 இப்பொழுதெல்லாம் மேற்படி நடுவணரசு நிறுவனங்களில் 100க்கு 80 விழுக்காட்டு அளவில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள்.

அடுத்து, தமிழ்நாட்டின் மாவட்ட அளவிலான நீதிபதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் ஆகியோரை பணியமர்த்துவதற்கு அனைத்திந்தியத் தேர்வு முறையை அறிவித்துள்ளார்கள். அதன்படி தமிழ்நாட்டில், நீதிமன்றங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் தமிழ் தெரியாத – வடமாநிலங்கள்  உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நீதிபதிகளாகவும் மருத்துவர்களாகவும் இருப்பார்கள். 

எனவேதான், இந்த அனைத்திந்தியத் தேர்வுகள் அனைத்தும் தமிழர் தாயகத்தில் தமிழர்கள் படிக்கும் உரிமையைப் பறிப்பது, வேலை பார்க்கும் உரிமையைப் பறிப்பது என்ற உள்ளடக்கம் கொண்டவை! ஆரியத்துவாத் தத்துவத்தின்படி தமிழர்களை ஓரங்கட்டி, கீழ்நிலைக்குத் தள்ளும் இந்திய அரசின் ஏற்பாடுகள்தான் இந்தத் தேர்வுகள்! 

எனவே, மொழிவழியாக அமைந்துள்ள தமிழ்த்தேசிய இன தாயக உரிமைகளைப் பாதுகாக்கத்திட வலுவாகப் போராட வேண்டும்!

 

நம் கோரிக்கைகள்:

1. முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி விலக வேண்டும், நடுவண் அமைச்சர் பொறுப்பிலிருந்து நிர்மலா சீத்தாராமன் விலக வேண்டும்.

 
2. தமிழ்நாட்டுக்கு “நீட்” தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்களிக்க வேண்டும்.


3. கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். 

தனக்காக மட்டுமின்றி, தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் - தன்னுயிர் ஈந்த மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம்!

சார்ந்த செய்திகள்