''சபாநாயகர் அப்பாவு இன்னும் வாத்தியராகவே இருக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியை பேசவே விடுவதில்லை'' அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், ''திமுகவை பொறுத்தவரை ரவுடி கட்சி. எப்பொழுதுமே அவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. நாகரீகம் அற்றவர்கள். அவர்கள் நாகரீகம் உள்ளவர்களாக இருந்தால் எதிர்க்கட்சிகள் கருத்துக்களை பரிமாறுவார்கள். விமர்சனத்தை தாங்கிக் கொள்வதற்கு முதல்வருக்கும் சரி, அங்க இருக்கின்ற அமைச்சர்களுக்கும் சரி, பேரவை நடத்துகின்ற தலைவருக்கே இல்லை. விமர்சனம் செய்தால் அவரே அதற்கு பதில்சொல்லி விடுகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஏதாவது குறைபாட்டை பற்றி பேசினால், சட்ட ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கிறது; ஒவ்வொரு துறையிலும் என்னென்ன நடைபெறுகிறது; என்னென்ன குறைகள் இருக்கிறது; மக்கள் என்ன பேசுகிறார்கள் என்று சொல்லி பேச வரும் பொழுது பேசவே விடுவதில்லை. அவரே இந்த கருத்துக்கு பதில் இந்த கருத்தை எழுதிக் கொள்ளுங்கள். இதை நீக்கிடுவோம் அதை நீக்கிடுவோம் என்கிறார். ஒரு சட்டமன்றத்தை வாத்தியார் மாதிரி நடத்துக்கிறார். இன்னும் சட்டமன்ற சபாநாயகராக செயல்படவில்லை. அவர் ஒரு ஆசிரியராகவே இருக்க பார்க்கிறார். ஆசிரியர் பணி என்பது வேறு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு என்பது வேறு. ரொம்ப கேலிக்கூத்தாக இருக்கிறது. அசிங்கமாக இருக்கிறது. சட்டமன்றமாக நடத்துறாங்க. சட்டமன்றம் மாதிரியே தெரியல'' என்று கடுமையாக விமர்சித்தார்.