கேரள மாநிலத்தில் இருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை கேரளாவின் எல்லையில் உள்ள தமிழகப் பகுதிகளில் கொட்டப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் உள்ள தென்காசி, திருப்பூர், கன்னியாகுமரி, பொள்ளாச்சி, தூத்துக்குடி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் கொட்டப்படுவதால் அப்பகுதிகளில் சுகாதாரச் சீர்கேடுகளும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகின்றன. இது தொடர்பாக தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இவ்வழக்கை விசாரித்து வரும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினரான நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினராக உள்ள சத்யகோபால் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தைச் சேர்ந்த கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த திருச்சூர், வயநாடு, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் என 17 மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை ஜனவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.