நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால், இரண்டு லட்சம் தருகிறோம் என மெக்கானிக்கை ஏமாற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருவேங்கடசாமி, அதே பகுதியில் மோட்டார் மெக்கானிக் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில், திருவேங்கடசாமி வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார். அப்போது, திருவேங்கடசாமிக்கும் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில், மணிகண்டன் கூறும்போது, "என்னுடைய முதலாளி கார்த்தி என்பவர் நிறைய கருப்பு பணம் வைத்துள்ளார். அந்தப் பணத்தை எங்களால் வெளியே கொண்டுவர முடியாது. அதனால், நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால், நாங்கள் இரண்டு லட்சம் தருவோம்" எனப் பேசியுள்ளார். இதில், சிறிது பதற்றமடைந்த திருவேங்கடசாமி, இப்போது என்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.
ஆனால், திருவேங்கடசாமியை விடாத மணிகண்டன், அவரை தினமும் செல்போனில் அழைத்து, பணம் ரெடி ஆகி விட்டதா? சீக்கிரம் வாருங்கள். இல்லையென்றால், உங்களுக்குப் பணம் கிடைக்காது என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இதை உண்மை என நம்பிய திருவேங்கடசாமி அவருக்குத் தெரிந்த பைனான்சியர் கணேஷ் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.
இதையடுத்து, ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுப்பதற்கு பைனான்சியர் கணேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, மணிகண்டனுக்கு போன் செய்த திருவேங்கடசாமி, என்னிடம் பணம் தயாராக உள்ளது. எங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் எனக் கேட்டுள்ளார். மணிகண்டனோ ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வாருங்கள். உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த திருவேங்கடசாமி, அம்பராம்பாளையத்தில் காத்துக் கொண்டிருந்த கார்த்தி மற்றும் மணிகண்டனிடம், தான் வைத்திருந்த ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து நான்கு 500 ரூபாய் கட்டுகளில் இரண்டு லட்சத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் பணத்தை கொடுத்தவுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றவுடன் அந்த நான்கு 500 ரூபாய் கட்டுகளை எடுத்து பார்த்தபோது திருவேங்கடசாமிக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதில், முன்பக்கம் பின்பக்கம் என 4 அசல் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்துள்ளது. மற்றவை எல்லாம் வெறும் வெள்ளைத் தாள்கள் தான். இதனால், திடுக்கிட்டுப்போன திருவேங்கடசாமி, என்ன செய்வது எனத் தெரியாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், திருவேங்கடசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருப்பு பணம் தருகிறோம் எனக் கூறி வெள்ளைத் தாள்களை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.