காங்கிரஸில் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த விஜயதரணி அண்மையில் பாஜகவில் சேர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அதேநேரம் தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''மீண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட இருக்கிறார். யார் கண்டிப்பாக தோற்பார்கள் என்ற பட்டியலை இன்றைக்கு அறிவித்திருக்கிறார்கள். நம்முடைய ஊரின் சாம்பார் பிடித்திருக்கிறது போல அதனால் தான் மோடி அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்.
திமுக கூட்டணியில் சுமூகமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்து வெளியிடப்படும். இழுபறி எல்லாம் இல்லை. கண்டிப்பாக இந்த தேர்தலோடு காணாமல் போகப் போகிறவர் யார் என்றால் மோடி தான். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மோடி எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். தமிழகமே அவர்களுடைய சொந்த பூமி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து வருகின்ற பணத்தையோ, நிதியையோ, வரியையோ மீண்டும் தமிழக வளர்ச்சிக்கு கொடுக்கலாமென்று இல்லாமல் அவர்கள் சுருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏழரை லட்சம் கோடி ரூபாயை மோடி சுருட்டி இருக்கிறார். உலக வரலாற்றில் இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம், லஞ்சம் ஊழல் எங்கேயும் நடந்தது இல்லை'' என்றார்.
விஜயதரணி பாஜகவிற்கு சென்றது குறித்து கேள்விக்கு, ''சில கெட்ட சக்திகள், மோசமான சக்திகள் காங்கிரசை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக வெளியேறி இருக்கிறது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்''எ ன்றார்.
'தமிழகத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன' என்ற கேள்விக்கு, ''தமிழகத்தில் கஞ்சா குடிக்கும் பழக்கம் என்பது நூற்றுக்கணக்கான வருடங்களாக இருக்கிறது. இப்போது அதை கட்டுப்படுத்துவதற்காக முயற்சிகள் எடுக்கும் பொழுது பல இடங்களில் தப்புத் தண்டாவில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். அதிமுகவில் எத்தனை சமூகவிரோதிகள் இருக்கிறார்கள் என பட்டியல் எடுத்தால் தமிழகத்தில் பாஜகவிற்கு அடுத்து அதிகமாக குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான் என்பது தெரிய வரும்'' என்றார்.