ஈரோட்டில் தொழில் மற்றும் வேலை நிமித்தமாக பல ஆண்டுகளாக வசிக்கும், ராஜஸ்தான் உள்பட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்தோர், ஈரோடு, மணிக்கூண்டு அருகே, வெங்கடாசலம் வீதியில், 27 ஆண்டுகளுக்கு முன், ராம்தேவ் பெருமாள் கோவிலைக் கட்டினர். இக்கோவிலில், ஆண்டுதோறும் ராம்தேவ் பெருமாள் தேர்த்திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு, 25வது ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த 5ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை கோவிலில் இருந்து ராம்தேவ் பெருமாள் உருவச்சிலை தேரில் எடுத்து வரப்பட்டது. நேதாஜி சாலை, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, வெங்கடாச்சலம் வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. முன்னதாக தேரோட்டத்தை கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஈரோட்டில் வசிக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என, 800க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் பங்கேற்றனர். விநாயகர், ராமர், லட்சுமணன், முருகர், விஷ்ணு, லட்சுமி உள்பட பல்வேறு சுவாமிகளின் வேடமணிந்து, 10க்கும் மேற்பட்டோர் வந்தனர். மாலையில் கோவிலில் சிறப்புப் பூஜை, வழிபாடுகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராம்தேவ் சேவா சங்க செயலாளர் லலித் ஹரிவாள் மற்றும் குழுவினர் செய்தனர்.