கூட்டுறவுத்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி இல்லத்தில் ஆத்தூர் தொகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், ஆத்தூர் தொகுதி மக்கள் மருத்துவச் சிகிச்சை, கல்லூரி நிதி, கிராமப்புற சாலைகள், புதிய ஆழ்துளைக் கிணறுகள், கிராமங்களில் நாடக மேடைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மனு கொடுத்தனர். கிராம மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை செல்போன் மூலம் உடனுக்குடன் தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு வழங்கினார்.
விரைவில் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதே இடத்தில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தி.மு.க.வினர் தங்கள் பகுதிகளில் உள்ள முதியோர்களுக்கு நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு உறுதுணையாக இருப்பதோடு ஏற்கனவே நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர்களின் பட்டியலை கணக்கெடுத்து அவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க உதவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
இதில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தண்டபானி, மாநகர மேயர் இளமதி, ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள், பொதுமக்களும் பெருந்திரளாக இருந்தனர்.