Skip to main content

வழக்கறிஞரை தாக்கிய வழக்கு: நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை ஜாமீன்!

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
வழக்கறிஞரை தாக்கிய வழக்கு:
நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை ஜாமீன்!

வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் நடிகர் சந்தானத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

பிரபல நகைச்சுவை நடிகர் சந்தானம், வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கட்டுமான நிறுவனத்துடன் சேர்ந்து குன்றத்தூர் அருகே திருமண மண்டபம் கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்காக 3 கோடி ரூபாயை அந்நிறுவனத்தின் சண்முகசுந்தரத்திடம் முன்பணமாக கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த நிறுவனம் திருமணம் மண்டபத்தை கட்டாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை சந்தானம் ரத்து செய்துள்ளார். இதனையடுத்து தனக்கு கொடுக்க வேண்டிய தொகையை சந்தானம் திருப்பி கேட்டபோது, குறிப்பிட்ட ஒரு தொகையை திரும்ப கொடுத்த கட்டுமான நிறுவனம். மீதமுள்ள சில லட்சங்களை கொடுக்காமல் இருந்துள்ளது.

இதையடுத்து சந்தானம் மற்றும் அவரது மேலாளர் ரமேஷ் ஆகியோர், மீதி பணத்தை கேட்கச் சென்றபோது, 'இன்னோவேட்டிவ் கன்ஸ்டிரக்ஸன்' நிறுவனத்தின் சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் பிரேமானந்த் ஆகியோருடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த சண்டையில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்துக்கு மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சந்தானம் மீது வழக்கறிஞர் பிரேமானந்த் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என கருதி, நடிகர் சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கப்பட்ட வழக்கறிஞர் பிரேமானந்த் தரப்பில் தன்னையும் இந்த வழக்கில் இணைக்க வேண்டும் என கோரினார். மேலும் சந்தானத்துக்கு ஜாமின் வழங்க கூடாது எனவும் கோரினார்.

அப்போது நீதிபதி பிரேமானந்த் தரப்பை வழக்கில் இணைக்க மறுப்பு தெரிவித்தார். மேலும் தாக்கப்பட்ட பிரேமானந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிந்து தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடிகர் சந்தானத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி இரண்டு வாரத்திற்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கையோழுத்திடவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

- ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்