மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளில் மின்சாரம் இல்லாமல் அவதிப்படும் மாணவர்களுக்கு ஆசிரியை மோனிசா சோளார் விளக்குகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு மரங்கள், வீடுகள் சேதமடைந்ததுடன் மின்கம்பங்கள் உடைந்து மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கீரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் வெளியூர்களில் இருந்து மீட்புப் பணிக்காக வந்த மின்சார வாரிய ஊழியர்கள் முதலில் அந்தந்த பகுதிகளில் உள்ள குடிதண்ணீர் தொட்டிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் வெளியூர் மின்வாரிய ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகள் கிடைக்காமல் 24 நாட்கள் கடந்தும் இருளில் மூழ்கியுள்ளது. அதனை போக்க போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால் அந்தந்த பகுதி இளைஞர்களே மின்கம்பங்கள் நட்டு மின்கம்பிகளை அமைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிழக்கு கிராமத்தில் இன்னும் ஏராளமான வீடுகளுக்கு மின்இணைப்புகள் கிடைக்காததால் குழந்தைகளுடன் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தற்போது பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளது. ஆனால் மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் படிக்க முடியாமல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் மேற்பனைக்காடு கிழக்கு அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளில் மின்சாரம் இல்லாதவர்களுக்கு படிக்க வசதியாக சேலம் ஆசிரியை மோனிகா தனது சொந்த செலவில் சோலார் விளக்குகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். அதே போல மேலும் பல பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சோலார் விளக்குகளை வழங்க பல தன்னார்வளர்கள் முன்வந்துள்ளனர்.