சென்னையை சேர்ந்த கே.பி.ஷியாம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஐஐடி கல்லூரியில் ஐந்து ஆண்டு எம்.டெக் படிப்பை பயின்று வருகிறார். இவர் கணினி அறிவியல் பொறியியல் துறை படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வருகிறார்.இந்த இளைஞர் தான் வேலையில் சேர்ந்தால் கூகுள், அமேசான், பேஸ்புக் போன்ற நிறுவனங்களில் தான் பணியாற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்தார். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் எடுக்க போகிறார்கள் என்ற செய்தியை அறிந்து, இணையதளம் மூலம் கூகுள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்துள்ளார் ஷியாம்.
இவரின் விண்ணப்பத்தை பரிசீலித்த கூகுள் நிறுவனம் நேர்காணலுக்கு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து ஷியாம் நேர்காணலுக்காக ஜெர்மனியில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு சுற்றுகளில் தேர்வுகளை கூகுள் நிறுவனம் வைத்தது. அனைத்து தேர்வுகளிலும் ஷியாம் வெற்றி பெற்றதாக கூகுள் நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் கே.பி. ஷியாமை பணியில் சேருமாறு கூறி, பணி ஆணை கடிதத்தை அனுப்பியது. அதில் கே.பி ஷியாமை ஆண்டு ரூபாய் 60 லட்சம் சம்பளத்தில் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு எடுத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் ஷியாம் அக்டோபர் மாதம் முதல் போலந்து நாட்டில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ஷியாம், தனது சொந்த முயற்சியாலும், பேராசிரியர்களின் ஆதரவுடனும் தான் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவரின் தந்தை ஐசிஎப் நிறுவனத்தில் பணிப்புரிகிறார். அதே போல் ஷியாமின் தாய் அரசு அதிகாரியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.