சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்றுள்ளார். அந்த விமானத்தில் சென்ற மாணவி சோபியா என்பவர், பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் சோபியாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் நெல்லை விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரணை நடைப்பெற்றது. சோபியா மற்றும் அவரது தந்தை சாமி ஆகியோர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜரானார்கள்.
இதனைத் தொடர்ந்து சோபியா வழக்கறிஞர் அதிசயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், சோபியாவை போலீசார் மனரீதியாக சித்ரவதை செய்துள்ளனர். சோபியாவின் படிப்புக்கு எந்தவித இடையூறும் செய்ய மாட்டோம் என்று போலீசார் உறுதி அளித்துள்ளனர். சோபியா மீது வழக்குப் பதிவு செய்த உதவி ஆய்வாளர் லதா ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விமானத்தில் நடந்த விவகாரம் குறித்து விமானிதான் புகார் தெரிவிக்க வேண்டும். எங்கள் புகார் பற்றி வழக்குப்பதிவு செய்ய முறையிட்டுள்ளோம். அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது என்றார்.