Skip to main content

"சமூக நீதி சங்கங்கள் இந்தியா முழுவதும் ஒன்றுபட வேண்டும்"- திருமாவளவன் எம்.பி. பேச்சு!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

"Social justice associations should unite across India" - Thirumavalavan MP Talk!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் பிறந்த நாள் விழா நடந்தது. சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை என்ற பெயரில் இசை அரங்கம், வாழ்த்தரங்கம் நடந்த இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் பால அறவாழி தலைமை தாங்கினார். 

 

கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், காட்டுமன்னார்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருமாவளவனை வாழ்த்தி பேசினர்.  

 

அதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன் எம்.பி., "எல்லோரும் இந்து என்கிறார்கள். ஒரு தரப்பினர்  கோவிலுக்கு உள்ளேயும், மற்றவர்கள் வெளியே நிற்பதுதான் சனாதனம். எந்த சாதியாக இருந்தாலும், ஆகம விதிகளை கற்றுக்கொண்டால் கருவறைக்குள் நுழைய முடியும் என்கிற கோட்பாடுதான் சமூகநீதி. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கே இட ஒதுக்கீடு தரும்போது, இந்தியாவில் எந்த ஒரு தலித் சமூகமும் எதிர்க்கவில்லை. ராம்தாஸ் அத்வாலே, கன்ஷிராம், மாயாவதி உள்ளிட்ட எந்த தலைவர்களும் எதிர்க்கவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றது. இன்னும் கூடுதலாக வேண்டும் என்று கேட்டோம்.

"Social justice associations should unite across India" - Thirumavalavan MP Talk!

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் சமூக நீதிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருகின்றனர். வெளிப்படையாகப் பேசாமல் சமூக நீதியை அழிப்பதற்கான அனைத்தையும் செய்கின்றனர். சாதிவெறியைத் தூண்டி மதவெறியை வளர்க்கிறார்கள். அதனால் சமூகநீதிக்கான சங்கங்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. எந்த சாதியாக இருந்தாலும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது. பார்ப்பனர்கள் மட்டும்தான் கோவிலுக்குள் நுழைய முடியும் என்று இருந்தது.

 

எப்படி உங்களால் பா.ஜ.க.வோடு செல்ல முடிகிறது. எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் உறவாட முடிகிறது. சமூகநீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க. நாம் தி.மு.க.வை ஆதரித்தோம். தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை சிதறடித்து அதன் மூலம் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால், அது அ.தி.மு.க. ஆட்சியாக இருந்திருக்காது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாகத் தான் இருந்திருக்கும். அதன் மூலம் மிகப்பெரிய ஆபத்தை தமிழ்நாடு சந்தித்திருக்கும். அ.தி.மு.க. ஆட்சி மட்டும் மீண்டும் வந்திருந்தால் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அவர்களை கட்டுப்படுத்த முடியாது. அ.தி.மு.க., பா.ஜ.க.வாக மாறி இருக்கும்.  

 

மண்டல் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்றபோது அதை எதிர்த்து வீதிக்கு வந்து போராடியது யார்? மருத்துவர் ராமதாசை பார்த்து நான் கேட்கிறேன். மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வன்முறையை நடத்தியது பிஜேபிதான். எந்த சமூகமும் படித்து, நல்ல வேலைக்கு வந்து விடக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தது பிஜேபி. அத்வானி தலைமையில் அன்றைக்கு மிகப் பெரிய வன்முறை நடந்தது. ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் எதிரியா? அதை ஆதரித்தவர்கள் எதிரியா?

 

"Social justice associations should unite across India" - Thirumavalavan MP Talk!

 

தலித், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இயக்கங்கள் போன்ற இயக்கங்களாக உள்ள சமூக நீதி சங்கங்கள் இந்தியா முழுவதும் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்த முடியும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாமல் தடுக்க முடியும். மீண்டும் மதவெறி மற்றும் சனாதன சக்திகளின் கைப்பிடியில் இந்த நாடு சிக்கினால் அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு, மனு தர்மத்தை சட்டமாக, ஆட்சி அதிகாரமாக கொண்டு வந்து விடுவார்கள். ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என என்ற நிலையைக் கொண்டு வருவார்கள். எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் தான் மோடி" எனத் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்